Friday, July 08, 2005

உயிரின் மதிப்பு என்ன தெரியுமா?

Peaceful world? வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று முழங்கியவர் வள்ளலார். ஆனால் தற்போதைய சூழலில் மாண்டு கிடக்கும் மனிதர் கூட இரக்க மனப்பான்மையோடு பார்க்கப்படுவதில்லை. மனங்கள் கல்லாகிக் கொண்டு இருக்கின்ற மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கிக் கொண்டு இருக்கிறது. எங்கே போர் இல்லா ஒரு புது உலகம் அமைந்து விடுமோ, என்று மாந்தரில் சிலரும், உலகுக்கே பெரியண்ணனாய் திகழும் சில நாடுகளில் சிலவும் அவ்வப்போது நச்சு விதைகளை உலகில் விதைக்கத் தவறுவதில்லை.

இன்று (07.07.2005)லண்டனில் தொடர் குண்டுவெடிப்பு, பலர் இறந்துள்ளனர். அநேகம் பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். உயிரிழப்பு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. அதில் எனது கருத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை. ஆனால் லண்டன் குண்டுவெடிப்பிலும், அமெரிக்க வர்த்தகக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போது ஏற்பட்ட உயிரிழப்பும் மட்டும் இழப்பு அல்ல. மாறாக இராக்கில் போர் தொடுக்கப்பட்ட போதும், வியட்நாமில் போர் தொடுக்கப்பட்ட போதும், அமைதி நிலை நாட்டுகிறேன் என அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படும் போதும், மக்களாட்சியை மலரச் செய்யப் போகிறேன் என மாக்களாய் மக்களைப் பலியாக்கும் போதும் (இன்னும் பல)ஏற்படுகிறதே அதுவும் ஈடு இணை செய்ய முடியாத மிகப் பெரிய உயிரிழப்புகள் தாம் என்பதை புத்தியுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர். தனி மனித இழப்பு என்பது எங்கும் ஒன்றே. ஆனால் அணுகும் காரணிகளால் மிகப் பெரிய இழப்புகளைக் கூட சாதாரண கொசுக்களை நசுக்கிப்போடும் போது உள்ளதாய் நினைப்பது வேதனையாய் இருக்கிறது.

தீவிரவாதத்திற்கு ஜால்ரா தட்டுகிறேன் யாரும் எண்ணிவிடக் கூடாது. தீவிரவாதம் என்ற ஒன்று வர அல்லது வளர ஏதோ ஒரு இடத்தில் கோளாறு இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு கொலைவெறித் தாக்குதல் தான் தீர்வா? நிச்சயம் இல்லை. ஆனால், கொலை வெறித் தாக்குதல் நடத்து அளவுக்கு, பாதிப்பை ஏற்படுத்துவது யார்? எதனால்.... யாரோ ஒருவரின் சுயநலம், அல்லது நாட்டின் சுயநலம் போராய் மாற, அவை வடுக்களாய் மக்கள் மனதில் நிரந்தரமாய் படிய, இவை தலைமுறை தாண்டி வரும் கொடுமையாய் வாடிக்கையாய் போகிறது.

தீவிரவாதிகள் தனது செயலை குறிப்பிட்ட சில சமயங்களில், இடங்களில் நிகழ்த்துவதற்கு காரணம்? அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது எளிதாகிறது. அவர்கள் அறியப்படுகிறார்கள். அங்கீகாரம் ஒருவருக்கு அளிக்கப்படும் போது அல்லது அமைப்போ, அல்லது தனிநபரோ கண்டு கொள்ளப்படும் போது தனது பிரச்சனைகள் மற்றவருக்கு தெரிய வருவதாய் மனித மனதிற்கு படுகிறது. இது உண்மைதான். ஆனால் அது எந்த அளவில் புரிந்து கொள்ளப்படுகிறது. அல்லது, பாதிக்கப்பட்டவர்கள் தனது பாதிப்புகளை எந்த அளவில் புரிய வைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.

ஆதிக்க மனப்பான்மை என்று ஒழிகிறதோ அன்று தான் அகிலம் அமைதியில் திழைக்கும். இது நிச்சயம். We want peaceful world

4 comments:

')) said...

அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அது கடுமையாய் எதிர்க்கப்பட வேண்டியதே. ஏதுமறியா மக்களைக் குண்டுகளால் கொல்லும் கொடியோர்கள், காட்டுமிராண்டிகளை விட மோசமானவர்கள்.இத்தகைய குண்டு வெடிப்புக்களின்மூலம் அவர்கள் பெறப்போவது உலக மக்களின் வெறுப்பும், அருவருப்பும் நிறைந்த கவனம் மட்டுமே தவிர வேறல்ல. எதற்காகவும் தன் சொந்தச் சகோதரனைக் கொல்லும் இப்பாதகச் செயலைச் செய்தாலும் அது மனித குலத்துக்கு எதிரானதே.

')) said...

//எதற்காகவும் தன் சொந்தச் சகோதரனைக் கொல்லும் இப்பாதகச் செயலைச் செய்தாலும் அது மனித குலத்துக்கு எதிரானதே.//

நிச்சயமாக முத்து. உறவுகளுக்கு இச்செயல்களில் அர்த்தம் அறவே இல்லை.

')) said...

மிக நல்ல பதிவு ஜான்,

ஆதிக்க மனப்பான்மை என்று ஒழிகிறதோ அன்று தான் அகிலம் அமைதியில் திழைக்கும். இது நிச்சயம்.

ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து.. ! அந்த நாளுக்காக நம்பிக்கையாக காத்திருப்போம்..
வீ எம்

')) said...

yeah, what the crap, what language is this?