Monday, April 17, 2006

இலவச அரசியல்



TN Election 2006 அறிஞர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கிறார்கள்; அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பது ஒரு சிந்தனையாளர் கருத்து. தேர்தல் காலங்களில் இக்கூற்றிற்று சான்று சொல்லும் வண்ணம் அரசியல்வாதிகளின் பிரச்சாரங்கள் அமைவதை தினம் தினம் காணலாம். பிரச்சாரங்கள், நாட்டிற்கு நலம் பயக்கும் தொலைநோக்கு திட்டங்களை மையப்படுத்தி அமைவது விடுத்து, ஆட்சியைப் பிடிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இருக்கின்றன. எத்தனை புதுக்கட்சிகள் வந்தாலும் அரசியல் காட்சிகள் எப்போதும் ஒன்று போலவே உள்ளன. இலவசமாக எதைக் கொடுத்தாலும் அதை வாங்குவதற்கு பழக்கப்பட்டுவிட்ட மக்கள், அதையே எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்த சூட்சுமம் அறிந்தே, மக்களுக்கு இலவச திட்டங்களை அவிழ்த்து விடுகின்றனர். அரிசி முதல் சகலமும் இலவசமாய் கிடைப்பதாக இருந்தால், மக்கள் அதை வழங்குகின்ற அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கத் துணிகின்ற நிலை காண நேருகிறது. எதற்காக அரசியல் கட்சிகள் இத்தகைய கவர்ச்சிகரமான திட்டங்களை தனது பிரச்சாரத்திற்கு முன்னிறுத்துகிறார்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்திலா! நிச்சயம் இல்லை. ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதிகாரத்தைப் பெற வேண்டும், ஐந்து வருடங்களுக்குள் தனது கஜானவை எவ்வளவு நிரப்பிக் கொள்ள முடியுமோ, அவ்வளவு நிரப்பிக் கொள்ள வேண்டும். இது சாதாரண பாமர மக்கள் அறிய முற்படுவதில்லை. அவ்வாறு அறிந்து கொள்ள நினைத்தாலும் அவர்களது, சமூக, பொருளாதார சூழல்கள் அவற்றிற்கு பாதகமாகவே இருக்கிறது.

நான் வழக்கமாக இரவு உணவு வேளையின் போது, லண்டன் பி.பி.சி. இன் தமிழோசை கேட்பது வழக்கம். அதில் இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர், தமிழகத்தின் கிராமப்புற வயதான மூதாட்டியிடம் தேர்தல் குறித்தும், யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்றும் கேள்வி எழுப்ப, அதற்கு அவர் சொன்ன பதில் இது. ‘யாரு சீல கோடுக்குறாகலோ அவகலுக்கு தான் ஓட்டு போடுவேம்.’ சிலர் கேள்வி எழுப்பலாம், யாரோ சிலர் கிராமப்புறத்தில் இவ்வாறு சொல்வது எப்படி தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் என்று. ஆனால் அந்த மூதாட்டி போன்ற பெரும்பாலோர் பங்கு கொள்ளும், குறிப்பாக ஓட்டு போடக்கூடியோர் உள்ளடக்கியதே இந்த தேர்தல். படித்த பெரும்பாலானோர் வாக்களிப்பதில்லை என்பது நிதர்சனம். எனவே தான் அரசியல் கட்சிகள், பாமர மக்களைக் கவர, இலவசம் என்ற கவர்ச்சிப் பிரச்சாரத்தினை தனது இறுதி ஆயுதமாக எடுக்கின்றனர்.

கல்வியறிவும், சமூக விழிப்புணர்வுமே இத்தகைய நிலையினை மாற்ற முயலும். எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் தேர்தலைப் புறக்கணிக்காது,தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, ‘;எந்தக் கட்சிக்கும் எனது வாக்கு இல்லை’ என வாக்குச் சாவடிக்கு சென்று பதிந்து கொண்டால், ஓரளவுக்காவது பொது மக்களின் மனநிலை அறிய வாய்ப்பு ஏற்படும். சிலவேளை அதுவே, அரசியல் கட்சிகள் தன்னை சற்று திருத்திக் கொள்ள வழிவகை செய்யலாம்.

0 comments: