Saturday, July 08, 2006

கழுகுமலைக்கு வாரீங்களா? - 2


இதே தலைப்பில் ஏற்கனவே ஏப்ரல் 2004 ல் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அப்போது வலைப்பூ பூத்த பருவம். அதிகமாக ஒன்றும் தெரியாது. தட்டச்சு கூட தட்டுத் தடுமாறித்தான் அடிக்கத் தெரியும் அப்போது. இப்பதிவானது கழுகுமலை பற்றிய வரலாற்று குறிப்பும், அது குறித்தான தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகை செய்தியும் இடம் பெறுகிறது.

கழுகுமலை ஊரானது கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையில் இருக்கின்ற ஒருபிரசித்தமான இடமாகும். சென்ற பதிவில் இரு புகைப்படங்கள் சேர்த்திருந்தேன். அது இணையத்தில் இருந்து தேடி எடுத்ததுதான். எனவே டிசம்பர் திங்கள் 2004 இல் கழுகுமலைக்கு (சொந்த ஊருங்கோ)சென்ற போது மறக்காமல் டிஜிட்டல் கேமராவில் அதிக புகைப்படங்கள் எடுத்து வந்தேன். அதில் புகழ் வாய்ந்த வெட்டுவான் கோயில், சமணர் பள்ளியும் அடங்கும். அப்புகைப்படங்களை யாஹூவில் ஒளிக் கோப்பாக இந்த இணைப்புக்குச் சென்று நீங்கள் பார்க்கலாம். படத்தின் கீழே இடத்திற்கான விளக்கமும் சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன். இணைப்பு இதுதாங்க.. இங்க பாருங்க

அந்த புகைப்படங்களில் சில கழுகுமலை வரலாற்றுக் குறிப்பும் உள்ளது. அப்புகைப்படத்தை மட்டும் மறுபடியும் கீழே பார்க்கலாம். படத்தை பெரிதாகப் பார்க்க படத்தைச் சுட்டுக.

கழுகுமலை வரலாறு
சரி உங்களால் வாசிக்க இயலவில்லை என்றால் அப்படத்தில் உள்ள செய்தி இது தான். வரலாற்றுக் குறிப்பு

இவ்வூரில் வரலாற்றுச் சிறப்பு வாயந்த மூன்று சின்னங்கள் உள்ளன.
1. முருகன் கோயில்
2. சமணர் பள்ளி
3. வெட்டுவான் கோயில்

மலையின் பெயர்: பழம்பெயர்: அரைமலை. இன்றைய பெயர்: கழுகுமலை
ஊர் பெயர்: பழம்பெயர்: பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம்.
நாட்டுப்பிரிவு: இராஜ இராஜப் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழவள நாட்டு நெச்சுற நாட்டு நெச்சுறம்.
ஊரில் குறிக்கப்பட்ட்டுள்ள அரசர்கள்: 1. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தகநெடுஞ்சடையன்)
2. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக வீரநாராயணன்)
3. சுந்தரசோழ பாண்டியன்
வரலாற்றுச் செய்திகள்:

இவ்வூரில் மங்கல ஏனாதி என்னும் தானைத் தலைவர் இருந்தார். அவருடைய இருசேவகர்கள் பாண்டியன் மாறஞ்சடையன் ஆய்மன்னன் கருநந்தன் மீது படையெடுத்த போது பாண்டியனுக்காக சென்று அருவி ஊர் கோட்டை அழித்து போரில் இறந்தனர். அவர்களுக்காக நிலம் அளித்ததை குசக்குடி தெரு கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ளது. மேலும் திருமலை வீரர், பராந்தக வீரர், பராந்தக வீரர் என்னும் பெயர் பெற்ற படைகள் பாண்டியன் பராந்தக வீரநாரயணன் காலத்தில் இவ்வூரில் இருந்தன. வெட்டுவான் கோயிலும், சமணர் பள்ளியும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளன.

ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளது போல கழுமலையில் சமணர் பள்ளியும் முக்கியாமான ஒன்று. அதைக் குறித்தான புகைப்படம் கீழே உள்ளது.

அதில் உள்ள செய்தி இதுதான:
சமணர் பள்ளி:

இங்குள்ள சமணச் சிற்பங்கள் யாரால் செய்யப்பட்டன என்று இங்குள்ள என்று வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. மலையில் சிறப்பாக வழிபாடு பெற்ற சமணர் தெய்வத்துக்கு 'அரைமலை ஆழ்வார்' என்றும் 'மலைமேல் திருமலைத் தேவர்' என்றும், இருந்தது. இதனருகில் பலர் சமணர் உருவங்களை செய்திருக்கிருக்கிறார்கள். கோட்டாறு, மிழலூர், வெண்பைக் குடி முதலிய 32 க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். இறந்து போன குடவர் சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதலிய பலரின் நினைவாக இவ்வுருவங்கள் செய்யப்பட்டுள்ளன. சமணத் துறவிகள் குரவர்கள் என்றும் குரவடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். பெண் துறவிகள் குரத்தியார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் சீடர்கள் ஆணாக இருப்பின் மாணாக்கர் என்றும் பெண்ணாக இருப்பின் மாணாத்தியர் என்றும் அழைக்கப்பட்டனர். எட்டி, எனாதி, காவிதி முதலிய சிறந்த தமிழ்ப்பட்டங்கள் பெற்றவர்களும் இச்சிற்பங்களைச் செய்வித்துள்ளனர். தச்சர், வேளாண், குயவர், கொல்லர், முதலிய பல தொழில் புரிவோரும் இங்கு பணிபுரிந்துள்ளனர். இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது. குணசாகரபடாரர் என்னும் சிறந்த சமணப் பெரியாரும் இன்னும் பல 'வயிராக்கியர்'களும் இங்கு வாழ்ந்துள்ளனர். இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கி.பி 768 - 800 ) தோற்றுவிக்கப்பட்டவை.

முருகன் கோயில்:

முருகன் கோயிலானது குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. இது பற்றிய முழுமையான தகவல்களை இதன் தொடர்ச்சியான பதிவில் விரிவாகக் காண்போம். திரு. ராகவன் தனது பதிவில் முருகன் கோயிலுக்கு சென்ற அனுபவத்தை தனது வலைப்பூவிலும் முத்தமிழ் மன்றத்திலும் பகிர்ந்துள்ளார். ஆர்வமுள்ளோருக்காக இணைப்பு இதோ: http://gragavan.blogspot.com/2006/05/8.html

கழுகுமலைக்கு என தனி வலைப்பக்கமும் தயாராகிக் கொண்டு இருக்கிறது. www.kalugumalai.com

மீண்டும் பல கழுகுமலை பற்றிய வரலாற்று தகவல்களோடு அடுத்த தொடர்ச்சி பதிவில்...
பழையவை: கழுகுமலைக்கு வாரீங்களா? - 1

4 comments:

')) said...

இதுவரை நான் அதிகம் அறிந்திராத ஊர்.அருமையான தகவல்கள்.நன்றி ஜான் பாஸ்கோ

')) said...

hi,

irandu vaarngalukku mundbu aandandha vigadanil numma s.ramakrishanan kalugu malaiyai parri eludhi irundhaar..

mudindhaal andha thagavalgalaiyum serkka..nandri..

appdiye time irundhaal numma pakkathirku vaanga padichitu sollunga ..nandri

')) said...

ஒங்க பேரையும் கழுகுமலையையும் பாத்துட்டு உள்ள வந்தேன். ஏமாத்தமில்லாம தகவல்களை அள்ளிக் கொட்டியிருக்கீங்க. படிச்சிக்கிட்டே வரைல என்னோட பதிவையும் பத்திச் சொல்லியிருக்கீங்க. நன்றி.

கழுகுமலை வரலாற்றுப் புகழ் பெற்ற ஊர். பெரிய தமிழ்க் கவிஞரான காவடிச் சிந்து புகழ் அருணாச்சலக் கவிராயரோட சொந்த ஊரும் கூட.

')) said...

வெட்டுவான் கோயிலைப் பற்றி செவிவளி(ழி)யாக வரும் கதையை சொல்லாமல் விட்டு விட்டீர்களே! நானும் கழுகுமலைக்காரன்தான்... இந்த பதிவைப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி!