Thursday, August 03, 2006

இரயில் நிலையம், பைராய்த், ஜெர்மனி

ஜெர்மனியில் இரயில் மிகவும் பிரசித்தமானது. அது செல்லும் போது இருக்கின்ற அதிர்வுகள் பெரும்பாலும் உணர முடியாது. அதுபோல் உள்கட்டமைப்பும் விமான ஊர்தி மிஞ்சுமளவு இருக்கும். இப்படிபட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய அழகான இரயிலில் அனைவரும் செல்ல விரும்புவர். மக்கள் பெரும்பாலும் கார் வைத்திருந்தாலும், தொலை தூர பயணங்களுக்கு இரயிலை விரும்பி பயன்படுத்துவர். இங்கு மூன்று வகையான இரயில் இருக்கிறது.
1. வட்டார இரயில் (Regional RE )
2. நகரிடை இரயில் (Intercity IC )
3. விரைவு நகரிடை இரயில் (Intercity Express ICE)
ICE அல்லது IC இரயிலில் செல்ல முன்பதிவு அவசியம் இல்லை என்றாலும் மூன்று தினங்களுக்கு முன்பாக எப்போது பதிவு செய்தாலும் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு 25, 50 சதவீத சலுகைகள் உண்டு. அடிக்கடி பயணம் செய்பவர்கள் ஒரு சலுகை அட்டை 'பான் கார்டு' கூட வாங்கிக் கொள்ளலாம். இதில் 25, 50, 100 என்று மூன்று உண்டு. இதைப் பெற குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். இது ஒரு வருடம் செல்லுபடியாகும். 50 பான் கார்டு பயன்படுத்தினால் உங்கள் பயணச் செலவில் 50 சதம் குறைப்பார்கள்...அப்படி கணக்கு.

மேற்கண்ட விபரங்கள் நான் சொல்லும் நிகழ்வை மேம்படுத்தி புரிந்து கொள்ளத்தான். சரி சுவையான நிகழ்ச்சிக்கு வருகிறேன்.

நானிருக்கும் ஊர் பைராய்த்தில் இருந்து பிராங்க்பர்ட் செல்ல பயணச்சீட்டு ஏற்கனவே வாங்கி இருந்தேன். போய் வர 100 யூரோவுக்கும் மேல். இங்க வந்த புதிது என்பதால மனம் ஒப்பவில்லை தான். எப்போதும் மனம் 50 ஆல் பெருக்கியே பெரு மூச்சு விடும். அதாங்க நம்ம ரூபாய்ல.. மனசு ஒப்பலை... பிறகு இவ்வளவு பணம் கொடுத்து யார் போவா என்று, பயணச்சீட்டை ரத்து செய்ய முடிவெடுத்து, இரயில் நிலையம் சென்றேன். அங்கு இரயில் நிலைய முன்பதிவரிடம், ஏற்கனவே பதிந்த பயணச்சீட்டினை ரத்து செய்ய எவ்வளவு தண்டத் தொகை கொடுக்கனும் எனக் கேட்டேன். சாதாரண பயணச்சீட்டு எந்தவொரு குறிப்பிட்ட சலுகையை முன்னிட்டும் (பான் கார்டு அல்ல) வாங்காமல் இருந்தால், மூன்று நாட்களுக்கு முன்னால் ரத்து செய்தால் பணம் அப்படியே திரும்ப கிடைக்கும் என அவர் சொல்ல, பயணச் சீட்டை ரத்து செய்து வாங்கிக் கொண்டேன். பணம் கையில் வந்ததும் ஏக திருப்தி...

ஒரு நணபர் நான் முன்னமே சொன்ன பான் கார்டு வசதி பற்றி முன்னொரு நாள் சொல்லியிருந்தார். எனவே நான் பான் கார்டு வாங்க ஆசைப்பட்டேன். அது பற்றிய விபரங்களை அப்போதே கேட்டேன். அவர் சொன்னதிலிருந்து சில விபரம் தெரிந்து கொண்டேன்.

இதில் 'கல்லூரி மாணவன்' (27 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே) என்ற தகுதியில் '50 பான் கார்டு' வாங்கினால் மாணவர்களுக்கு அதனை வாங்கவும் 50 சதவீத சலுகை உண்டு. அதாவது சலுகை பெற சலுகை ஹி ஹி. ஓ இரண்டு வருடத்திற்கு முன்பு சரியாக 27 வயது என்பதால் இவ்வளவு சலுகையா.. என வியந்த வண்ணம், ஏற்கனவே பெற்ற பணத்தை வைத்து '50 பான் கார்டு' வாங்க விண்ணப்பித்தேன். இரயில் நிலைய அதிகாரியும் மகிழ்ச்சியாக தற்காலிக கார்டு கொடுத்துவிட்டார். பின் அவரும் அடுத்த நபருக்கு திரும்புமாறு என்னிடம் விடை பெறச் சொல்லும் போது, மீண்டும் அவரிடம் ஏதோ கேட்பது போல பேச்சை இழுக்க..அவரும் சொல்லுங்கள் என்றார்.

நான் அவரிடம், எனக்கு இப்போது நீங்க முதலில் ரத்து செய்த பயணச்சீட்டு மறுபடியும் வேண்டும் என்றேன். அவரின் முகத்தில் கடுப்பு...இப்பதானே ரத்து செய்து பணத்தை கொடுத்தோம் அதற்குள்ளாக அதே பயணச்சீட்டு அதே இடத்திற்கு அதே நாளிற்கு கேட்கிறானே என மனதில் நிச்சயம் நினைத்திருப்பார்...நான் புன்னகைத்தவாறே நின்றிருந்தேன். கடுப்பாக இருந்தாலும் அது அவரின் வேலையாயிற்றே...அப்போது அவர் வெறுப்பில் பயணச்சீட்டினை தயார் செய்யும் போது, சற்று நேரத்திற்கு முன்பு வாங்கிய '50 பான் கார்டை' கொடுக்க முதலில் கண்டு கொள்ளாதவர் அப்புறம் என்னைப் பார்த்தார். நான் புன்முறுவலுடன், 'Ich brauche mein Fahrkarte mit 50 Bahn Card'
'எனக்கு எனது பயணச்சீட்டு 50 பார்ன் கார்டு சலுகையுடன் வேண்டும்'
எனச் சொன்னவுடன் அவருக்கு விசயம் புரிந்து விட்டது...பிறகு என்ன, பலே கில்லாடிப் பய என மனதில் நினைத்தாரோ என்னவோ, இம் என உதட்டை பிதுக்கி புருவம் உயர்த்தி பயணச்சீட்டினை கொடுத்தார். குலுக்குனு வந்த சிரிப்பை அடக்கி புன்முறுவலை மட்டும் முகத்தில் காட்டி 'ச்சூஸ்' (good bye) சொல்லி புறப்பட்டேன்.

கையில் காசு எதும் அதிகம் எடுத்துச் செல்லாமல் ஒரு வருடத்திற்குரிய சலுகை அட்டையும் வாங்கியாச்சு..பிராங்கபர்ட்டுக்கு 50 யூரோவுக்கு போக பயணச்சீட்டும் வாங்கியாச்சு.. என்றைக்கு நினைத்தாலும் இனிக்கும் நிகழ்வது எனக்கு...

9 comments:

')) said...

உங்க பாஸ்போர்ட்ல நேஷனாலிட்டி பாத்திருப்பார் தான அந்த பயண பதிவு அதிகாரி :-)

நெலிவு சுளிவு தெரியலனா 50% கிடைத்திருக்குமா?

பயணம் எப்படி இருந்தது?

')) said...

//உங்க பாஸ்போர்ட்ல நேஷனாலிட்டி பாத்திருப்பார் தான அந்த பயண பதிவு அதிகாரி :-)//
நன்மனம், இதுக்கு பான் கார்டு வாங்க புகைப்படம் போதும். கடவுச்சீட்டு (passport) தேவையில்லை..
நம்ம மூஞ்ச பார்த்தாலே தெரியாத நீங்க சொல்ற நேஷனாலிட்டி ஹி ஹி
பயணம் அருமைங்க..

')) said...

ஜான்
பான் அட்டையில் மகளிர் படம்!! அப்புறம் எப்படி சலுகையெல்லாம் கிடைக்குது?
ஏதோ சரியில்லை.பயணமாவது சுகமாக நடந்ததே!!

')) said...

உங்களுக்கு, பைரூத்தில் இருக்கிற பன்னீர் செல்வம் அவர்களைத் தெரியுமா?

')) said...

//உங்களுக்கு, பைரூத்தில் இருக்கிற பன்னீர் செல்வம் அவர்களைத் தெரியுமா?//

நன்றாக தெரியும் புதுமை விரும்பி. அவரது அன்பான தோழமை கூட ஒரு காரணம், பைராய்த் போன்ற குக்கிராமத்தில் சந்தோஷமாக காலந் தள்ளுவதற்கு.

')) said...

//பான் அட்டையில் மகளிர் படம்!! அப்புறம் எப்படி சலுகையெல்லாம் கிடைக்குது?//
வடுவூர் குமார், அது ஒரு உதாரணப் படமாக இட்டேன். என்னுடையது கண்டிப்பாக அல்ல. காட்சியோடு விளக்கினால் நல்லா இருக்குமேன்னுதான்.
நீங்க நல்ல செளகரியம் தானே?

')) said...

அட ரொம்ப சந்தோஷம். ஒரு தமிழ்க்குயிலின் விசாரிப்பினை, அவருக்கும், அவரது மனைவியாருக்கும் தெரிவித்துவிடுங்கள்.

')) said...

//அட ரொம்ப சந்தோஷம். ஒரு தமிழ்க்குயிலின் விசாரிப்பினை, அவருக்கும், அவரது மனைவியாருக்கும் தெரிவித்துவிடுங்கள்.//

ஹரே ராம் ஹரே ராம்

')) said...

ம்ம்... பெரிய ஆளுதான் போங்க