Saturday, February 16, 2008

மனச்சோர்வா...?

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நண்பர்களுக்கு ஏதாவது ஒரு கருத்தினை மையப்படுத்தி தனிமடல் எழுதுவது என் வழக்கம். அவ்வாறு தற்சமயம் எழுதிய மடலினை உங்களோடு பகிர்கிறேன்.
இம்மடலில் எனது எண்ணவோட்டத்தில் எழுந்த ஒரு சில கருத்துக்களை அதுவும் மனச்சோர்வை போக்கும் காரணிகள் குறித்து எழுதுகிறேன்.

ஒவ்வொரு நாளும் கல்வி அல்லது அலுவலகப் பணி புரிந்து வீட்டுக்கு திரும்புகிறோம். வீட்டினுள் நுழையும் வரை அன்று நடந்த நிகழ்வுகள் மனதிற்குள் அடிமனதில் ஒடிக்கொண்டு இருக்கும். சில நேரங்களில் குதூகலமாகவும், சில நேரங்களில் மனம் சோர்ந்தும், பல நேரங்களில் இயல்பாகவும் இருக்கும். இது நாம் சார்ந்திருக்கும் வேலை, நாம் வேலை செய்யும் நேரம், வேலை செய்யும் சூழல் சார்ந்து சற்றே மாறுபடும். ஆனால் எது எப்படி இருப்பினும் சில நேரங்களில் வீட்டிற்கு வந்து சில மணி நேரங்களாகி விட்ட நிலையிலும் மனதினை விட்டு நீங்காமல் ஏதாவது மனச்சோர்வு இருப்பதை பலரும் அன்றாட வாழ்வில் உணரும் நிலை நிச்சயம் உள்ளது. இந்த மனச்சோர்வு நம் மன அமைதியைத் தொலைத்து, அன்றைய இரவையும் பின்வரும் நாட்களையும் அமைதியற்றதாக ஆக்கிவிடுவதுண்டு. சில சமயங்களில் அடுத்து வருகின்ற அல்லது நாம் செய்கின்ற வேலையின் தரத்தையும், தன்மையும் பாதிக்கின்ற சூழல் ஏற்படுவது உண்டு. இதுவரை நான் குறிப்பிட்டது அனைத்தும் நிதர்சனம்.

மேற்குறிப்பிட்ட நிலைக்கு நானும் விதிவிலக்கல்ல. நானும் எல்லாவித மனநிலையிலும் இருந்திருக்கிறேன், இருந்து கொண்டும் இருக்கிறேன். மனம் இயல்பாகவோ, உற்சாகமாவோ இருக்கும் நிலைகளை குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் மனம் சோர்வாக இருக்கும் பட்சத்தில் எப்படி அதனை எதிர்கொள்வது? என்பது எல்லோருக்கும் எழுகின்ற ஒரு வினா. நாமும் மனச் சோர்விலிருந்து பலவாறு விடுபட்டு வந்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் அவற்றைச் குறுகிய காலத்தில் விரைந்து செய்கிறோமா? அல்லது சரியான வழிவகையினைத் தேர்ந்தெடுக்கிறோமா? என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். அலுவலகம் சார்ந்த மனச்சோர்வினைப் போக்க மிகச் சிறந்த எளிய வழி என்னவென்றால், காலணிகளை வீட்டிற்குள் நுழையும் போது விட்டு விட்டு வருவதைப் போல அலுவலகம் சார்ந்த பிரச்சனைகளையும் வீட்டிற்குள் நுழையும் போது விட்டு விட வேண்டும்.

பலர் எதிர் வினா எழுப்பலாம்...எவ்வாறு...பிரச்சனக்கான தீர்வு பிரச்சனை விட்டு ஒதுங்குவதோ அல்லது ஒதுக்குவதோ அல்ல என்று...பிரச்சனையை எதிர்கொண்டு பிரச்சனைக்கான மூல காரணத்தினை அறிந்து அகற்ற முயல்வதே புத்திசாலித்தனம் என்று..

இப்படி யாராவது சொன்னால் அவர்கள் கருத்தோடு சதமும் ஒத்துப்போகிறவர்கள் வரிசையில் நான் தான் முதலானவனாய் இருப்பேன். பிறிதொரு விவாதம் இல்லை. நான் நோக்கப்படுத்தி பார்ப்பது என்னவென்றால் நமது அலுவலகப் பிரச்சனையோ அல்லது பிறிதொரு பிரச்சனையோ நமக்கு எவ்விதத்திலும் மனச்சோர்வினை ஏற்படுத்தக் கூடாது. அதற்கு நான் முதலாக முன்மொழிவது பிரச்சனைகளை குறைந்தபட்சம் வீட்டிற்கு வந்தபின்பும் மனதில் இருத்தி அழுத்த வேண்டாம். தமிழில் வீடு என்பதற்கு சொர்க்கம் என்ற பொருளும் உண்டு. பிரச்சனைகளை மனதில் வைத்துக் கொண்டு வீடு நரகமாகக் கூடாது. எனவே தான் பிரச்சனைகளை வீட்டில் காலணிகளோடு விட்டு விடச் சொன்னேன்.

பிரச்சனைகளை மனதில் இருந்து விட்டு விடும் போது, மனம் இயல்பாகும், பின்பு மனைவி, மக்களைப் பார்க்கும் போது அல்லது இசையினை இரசிக்கும் போது மனம் குதூகலிக்கும். இப்படிப்பட்ட சூழலில் மனச்சோர்வினால் ஏற்படும் எதிர்விளைவுகளை தடுக்கிறீர்கள். அதே நேரத்தில் உற்சாக மனம் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க தொடங்கும். இந்த நிலையில் பிரச்சனைக்கான முழுக்காரணத்தினை ஆராய மனம் பக்குவப்பட்ட நிலையில் இருக்கும்.

சற்று நேரத்திற்கு முன்பு பிரச்சனைகளை விட்டு விட்டு வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்று சொன்ன நானே, பிரச்சனைகளை சிந்திக்க வேண்டும் எனச் சொல்கிறேனே என வியக்க வேண்டாம். மனத்தினை இயல்பான நிலையில் வைத்துக் கொண்டு பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தால் பிரச்சனைக்கான மூல காரணம் எளிதில் புலப்படும். அதற்கான விடையும் விரைவில் கிட்டும்.

அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படும் போது மனச்சோர்வு இயல்பாகவே ஒட்டிக் கொள்வது உண்டு. அதுவே உருத்திரண்டு நமக்கு பெரிதாக தோற்றமளிப்பதும் உண்டு.. எப்படி இறந்தவர் வீட்டிற்கு வந்து உறவினர்கள் தனது சோகங்களை நினைவுபடுத்தி அழுது தீர்ப்பார்களோ அது போல..

சிறு மனச்சோர்வே தனக்கு நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு நமக்கு பெரியதாக இடைஞ்சல் தரும். எனவே அதனை எதிர்க்கொள்ள எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, 1. ஈடுபாடு 2. மனதைரியம் என்ற இரண்டினை நாம் கொண்டிருந்தாலே போதும். பணியில் மிகுந்த ஈடுபாடு இருக்கும் போது இயல்பாகவே நம்மால் சிறந்த வகையில் பணியாற்ற இயலும். அது நமது துறைசார்ந்த பணியில் நல்ல முன்னேற்றத்தினைக் கொடுக்கும். அதுவே மிகுந்த நம்பிக்கையையும், மனதைரியத்தையும் கொடுக்கும். மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்யும் போது எதிர்ப்பார்ப்பு நிச்சயம் அதிகம் இருக்கும். நான் பரிந்துரைப்பது என்னவெனில் நமது ஈடுபாடு 100 விழுக்காடு என்றால் எதிர்பார்ப்பினை 30 விழுக்காடாகக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் அதிக எதிர்பார்பினை மனதில் ஏற்படுத்தி வைத்திருந்தால் நிச்சயம் மிகச் சிறிய தொய்வு கூட பலத்த ஏமாற்றத்தை சுனாமியாய் வாரி இறைத்து சென்று விடும். அதிலிருந்து மீள்வது என்பது காலம் எடுக்கும், கெடுக்கும் செயலாய் முடிந்து விடும்.

வாழ்வினை மகிழ்ச்சியாய் மாற்றிக் கொள்ள மனம் தான் அளவுகோல்...மனம் அதன் குணத்தினை மாற்றினால் அல்லது மாற்ற நாம் அனுமதித்தால் அதன் விளைவுகளும் அதற்கேற்றாற் போலே அமையும். மனத்தின் அளவுகோலினைப் பற்றி பிறிதொரு மடலில் விரிவாக எழுதுகிறேன்.

உங்களது நட்பில் மகிழ்கிறேன். எனது இச்சிறு மடல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கான சிறு காரணியாய் அமைந்தால், அம்மகிழ்வினை இறைவனுக்கே அர்ப்பணமாக்குகிறேன்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே - அருட்திரு வள்ளலார் அடிகள்

Pdf வடிவில் தரவிறக்கம் செய்ய !

ஒலி வடிவில்
Get this widget | Track details | eSnips Social DNA

6 comments:

')) said...

நண்பர்களே! மேற்கண்ட எனது பதிவினை நான் பேசி ஒலி வடிவமாக இணைத்துள்ளேன். இது எனது கன்னி முயற்சி..உங்களது மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

')) said...

ஆடியோ நன்றாக இருக்கு.நல்ல வேளை நாதஸ்வரம் சிறிய நேரம் மட்டுமே வருகிறது.

மனம் நாம் சொல்லும் படி பல சமயம் கேட்பதில்லை.கவலைப்படாதே என்று மூளை சொன்னாலும்.. கவலை இருந்துகொண்டு அதைவிட பெரிய கவலைக்காக காத்திருந்து மாறுகிறது.

மனம் என்பது என்ன? என்பது அடுத்த பெரிய கேள்வி.அதைப் பற்றி அடுத்து சொல்வதாக சொல்லியுள்ளீர்கள்,காத்திருக்கேன்.

')) said...

//ஆடியோ நன்றாக இருக்கு.நல்ல வேளை நாதஸ்வரம் சிறிய நேரம் மட்டுமே வருகிறது.//

அது சும்மா, என்னோட குரல் தவிர கொஞ்சம் வித்தியாசம இருக்கட்டுமேன்னு தான்..

நன்றி வடுவூர் குமார்.

')) said...

கவலை இல்லாதவர்களுக்கு கூட 'எனக்கொரு கவலையும் இல்லையே' என்ற கவலை இருக்குமென்று சொல்வார்கள். வாழ்வை சுவாரஸ்யமாக்கவே மனிதர்களுக்கு பிரச்சனையும் இருக்கிறது. எல்லாமே சுபமாக இருந்து விட்டால் அலுப்புத்தட்டிவிடும். ஒலி வடிவைக்கேட்டதும் பி.பி.ஸி சம்பத்குமாரோ என நினைத்தேன். கம்பீரமான குரல்! வாழ்த்துக்கள் திரு.ஜான்.

')) said...

//பிரச்சனக்கான தீர்வு பிரச்சனை விட்டு ஒதுங்குவதோ அல்லது ஒதுக்குவதோ அல்ல என்று...பிரச்சனையை எதிர்கொண்டு பிரச்சனைக்கான மூல காரணத்தினை அறிந்து அகற்ற முயல்வதே புத்திசாலித்தனம் //

என்னை கவர்ந்த வரிகள். நல்ல கட்டுரை ஜான்பாஸ்கோ.

BTW, என்னுடைய ப்ளாகுக்கு நீங்க சொன்ன ஆலோசனைக்கு ரொம்ப நன்றி, அதுவரை நான் கவனிக்கவே இல்லை.

')) said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்