கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) எனது அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, இந்திய அறிவியல் நிறுவனத்தில் (Indian Institute of Science)ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனது நண்பர் கண்ணன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல்...அன்று வெள்ளிக்கிழமை மாலை தமிழ்ப் பேரவை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதற்கான அழைப்பிதழ்...விவரங்களை தெரிந்து கொண்டதுமே மாலையில் இந்திய அறிவியல் நிறுவனத்திற்குச் செல்ல திட்டம் தீட்டியாயிற்று. உடன் வேலை புரியும் நண்பர் பிரேம்ராஜும் வருவதாயிற்று. காரணம் அன்றைய விழாவிற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையாவும், சந்திராயன் திட்ட இயக்குனர் முனைவர் ம.அண்ணாதுரையும் வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அலுவலகப் பணி முடிந்து, மாலை விழா நடக்கும் சதிஷ் திவான் அரங்கத்திற்கு 6.00 மணிக்குத் தான் செல்ல முடிந்தது. அதற்கு முன்பாகவே பேரா. இ.அருணன் தலைமை உரை ஆற்றி அமர்ந்திருந்தார். உயர்திரு முத்து செல்வன் (பெங்களூர் தமிழ்ச் சங்கம்) சிறப்புரையை நிறைவு செய்திருந்தார். நாங்கள் அரங்கத்திற்குள் நுழையும் வேளை பேரா. சாலமன் பாப்பையா அவர்கள் "சங்க இலக்கியமும், அறிவியலும்" என்ற தலைப்பில் பேச தலைப்பட்டார். அவருக்கே உரிய பாணியில் சங்க இலக்கியப் பாடல்களை அறிவியலோடு இணைத்து மாலையாய் கோர்த்துக் கொண்டிருந்தார். நமது சங்க இலக்கியங்கள் பிற மொழிகளில் அற்றைய காலத்திலேயே மொழிபெயர்ப்பு செய்யப்படாத காரணத்தினால் 'குடத்தினுள் இட்ட தீபாமாய்' ஆனது என்ற ஆதங்கத்தை அவரது பேச்சினூடே காண முடிந்தது. அணு, காலப் பாகுபாடு, இயற்கை அறிவு, வானவியல், கோள்களின் வகைப்பாடு இவற்றையெல்லாம் சங்கப் பாடல்களின் மேற்கோளோடு ஆற்றிய உரை இன்றும் மனதில் நிழலாடுகிறது. இதுதான் முதல் முறை அவரை நேரடியாகப் பார்க்கிறேன்.
அதற்குப் பின் சந்திராயன் திட்ட இயக்குநர் முனைவர் ம. அண்ணாதுரை அவர்கள் 'சந்திராயன் அனுபவங்களை' பகிர்ந்து கொள்ள பேச ஆரம்பித்தார். சந்திராயன் விண்ணில் ஏவப்படும் வரை அத்திட்டத்திற்காக உழைக்கும் போது அவர் கற்றிருந்த தமிழ் காயப்பட்டுக் கிடந்ததை நயம்பட கூறினார். ஆனாலும் தமிழில் பேச தலைப்பட்ட அவர், அவ்வாறு பேசுவதற்கு பேரா. சாலமன் பாப்பையா கொடுத்த ஊக்கம் பற்றியும் சொன்னார். அவரது தமிழ் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர்களின் வார்த்தை அலங்காரங்கள் இல்லாதிருந்த போதிலும் எதார்த்த்தை உணர்ந்து சொல்லுவதாய் இருந்தது. 3000 பொறியளார்களையும் இந்திய நடுவண் அரசு ஒதுக்கியிருந்த 386 கோடி பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஏகப்பட்ட மேலை நாடுகள் அளித்த சாதனங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு சந்திராயன் நிலவில் வெற்றிகரமாக இறங்க அவர்கள் எடுத்த முயற்சியை குறிப்பிட்ட போது மெய் சிலிர்த்தது. அவர் அடைந்த வெற்றி ஒரு துறையில் நடந்த ஒன்று..அதே விதமாய் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் காட்ட முடியும் என்றும் சொன்னார். கோவைக்கு அருகில் ஒரு சாதரண குக்கிராமத்தில் பிறந்து தமிழில் படித்து விண்வெளித் துறையில் சாதித்த விதம் குறித்து பேசிய போது, சிந்தனை ஆற்றலுக்கு தாய்மொழியாம் தமிழ் மொழியில் கற்றது அதிகமாய் உதவியதாகக் குறிப்பிட்டார். அறிவியலோடு இறை நம்பிக்கையும் பேசி தனது உரையை இனிதே நிறைவு செய்ய அன்றைய தினத்திற்கான நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
விழா நிறைவுற்ற பின் பேரா. சாலமன் பாப்பையா மற்றும் முனைவர். ம. அண்ணாதுரை அவர்களுடன் முக முகமாக அளாவளாவும் வாய்ப்பு கிட்டியது..அது என் பேறு.

பிப்ரவரி 07, சனிக்கிழமை பேரா. சாலமன் பாப்பையா தலைமையில் மாலை 5 மணிக்கு அதே சதிஷ் தவான் அரங்கத்தில் 'பண்பட்ட மனிதனை உருவாக்குவதில் பெரிதும் துணை செய்வது இல்லச் சூழலே! கல்விக் கூடச்சூழலே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 'இல்லச் சூழலே' என்ற தலைப்பில் பேரா. தா. கு. சுப்பிரமணியன், பேரா. சகுந்தலா சாமுவேல்சன், மாணவர் திரு. ப. துரைப்பாண்டி ஆகியோரும் 'கல்விக்கூடச் சூழலே' என்ற தலைப்பில் பேரா.இராம. சவுந்திரவல்லி, பேரா. சி. உமாபதி, திரு. இர. ப. சுவனேஷ்வர் ஆகியோரும் பேசினர். பட்டிமன்ற இறுதியில் 'பண்பட்ட மனிதனை உருவாக்குவதில் பெரிதும் துணை செய்வது கல்விக் கூடச்சூழலே!' என பேராசிரியர் தீர்ப்பு கூற பட்டிமன்றம் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து தேனி லட்சுமணராவ் குழுவினரின் தோல்பாவைக் கூத்து நடைபெற்றது.
தமிழ்ப் பேரவையின் சார்பில் மாணவர்கள் படைப்புகள் அடங்கிய 'மின்னல்' என்ற பொங்கல் இதழொன்று வெளியிடப்பட்டது. தமிழ்ப் பேரவைக்கான இணைய தளமும் துவக்கப்பட்டது.
சில புகைப்படங்கள் இங்கே..
பேரா. சாலமன் பாப்பையா உடன்
பேரா. தா.கு. சுப்பிரமணியன் உடன்..
நண்பர் கண்ணனுடன்...
பெங்களூரு வந்த பின் முதன் முதலாக தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது.
ஒலி வடிவில்