இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 4
வன்முறையை வேரறுப்போம் வா
வல்லமை தாராய் தமிழ்த் தாயே வளரும் இச் சிறியோன் வழங்கும் கவிக் களைகளைக் களைந்திடவே.
நன்மையொன்று புரிந்திட நாடு சுதந்திரம் பெற்றிட நாடினர் சிலர் வன்முறை
தான் என்றும் நிலைத்திட தரணி புகழ் பாடிட தன்னகத்தே காத்தனர் பலர் வன்முறை
கற்பாய் பேணும் நட்பிற்கே களங்கம் விளைத்த வன்முறை கட்டுக்கு அடங்காமல் வளர்ந்தது ஏனோ?
நாட்டினை, வீட்டினைப் பாராமல் நம்மகத்தே புகுந்துவிட்ட வன்முறை நாளாக நாளாக வளர்ந்துவிட்டது எம்முறை?
ஆதாயம் தேடும் ஆத்துமாக்கள், ஆண்டிடவே, அண்டிப் பிழைக்கும் குடிகள் கெடவே வந்திட்டது வன்முறை
ஐந்தறிவு விலங்கிற்கு விலையென்பார் வாங்கிடலாம். ஆருயிர் மனிதனுக்கு விலை என்றால் கொடுத்திடல் இயலுமோ?
பெறுவதற்கரிய உயிர் பலவே பூவாய், காயாய் உதிர்ந்திட்டால், பூலோகம் பிணக்கோலம் ஆகாதோ!
வன்முறையே! இன்று ஒலிக்கும் மணியோசை உன் இதயம் கலங்கடிக்கும் இடியோசை. இன்னுயிர் காத்திடும் இன்னிசை. ஒற்றுமை உலகம் உருவாக்கும் உயிரோசை. ஒன்றுபட்ட எங்கள் குரலோசை ஒழித்திடும் உன் அராஜகத்தை
உன் எஜமானர்கள் இன்று சிறை அறையில் நீயும் இனிமேல் கல்லறையில்
---------- பின்குறிப்பு: இக்கவிதை அ.நா. ஜா. அ. கல்லூரி, சிவகாசியில் இளங்கலைப் படித்த போது, தமிழ் மன்றம் சார்பாக நடத்தப்பட்ட கவி அரங்கத்தில் பாடப் பட்டது. ----------
பழைய பதிவுகள் இங்கே.. இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 1 இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 2 இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 3
