இது அவசியம் தானா?
இந்தியாவில் அதுவும் குறிப்பாக வட இந்தியாவில் இயல்பு வாழ்க்கை பல்வேறு போராங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் தங்களது மருத்துவப் பணிகளைப் புறக்கணித்து விட்டு, இட ஒதுக்கீட்டு முடிவுக்கு எதிரான போராட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்கள். மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைக்காக தவிக்கின்ற நிலை. சரி ஏன் இவர்கள் இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறார்கள்? அதன் பிண்ணி என்ன? இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு என்ன? என்றெல்லாம் ஆராய்ந்தால் இவை தான் பெரும்பாலும் விடையாக வரும். நல்ல மதிப்பெண்கள் வாங்கி வருபவர்களுக்கு இடம் மறுக்கப்படலாம். தரமில்லா மாணவர்கள் இந்தியாவின் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் நுழைந்து, அதன் தரம் குறைய வாய்ப்பு கொடுத்ததாக ஆகி விடும். தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் உள்ள செல்வந்தர்கள் கூட உயர்தரக் கல்வியை குறைந்த மதிப்பெண்கள் மூலம், இலவசமாக பெற்று விடுவர். இப்படி பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. ஏன் தாழ்ந்த வகுப்பினரும் அதிக மதிப்பெண் பெற்று உயர்தர கல்வி நிறுவனங்களில் நுழைய வேண்டியது தானே? என வினவவும் படுகிறது.
இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் அரசியலுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் தகுந்த முறையில் அலசி ஆராயப்படுவது அவசியமாகிறது அது தற்சமயம் அவசரமானது கூட. 27 சதவீதம் இடஒதுக்கீடை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவதால் மருத்துவர்களின் தரம் அக்கல்வி நிறுவனங்களில் குறைந்து விடும் என்பது தவறான கருத்து. அப்படியாயின் எத்தனையோ தனியார் கல்வி நிறுவனங்களில் 'மேனஜ்மெண்ட் கோட்டா' (நிர்வாக ஒதுக்கீடு) வழியாக மிகவும் சொற்ப மதிப்பெண்கள் எடுத்தவர்கள் கூட பணத்தைக் கொடுத்து இடத்தை வாங்கி விடுகின்றனர். அவர்களால் நாட்டில் மருத்துவர்களின் தரம் என்னவாகின்றது? அவ்வாறு அனுமதிக்கின்ற நடைமுறை இதுநாள் வரை நடைமுறையில் தானே உள்ளது. அதற்கு எதிராக யார் போராட்டம் இது நாள் வரை நடத்தியுள்ளார்கள். அது தேசத்தின் நலனைப் பாதிப்பதாக இப்போது போராடுபவர்களுக்கு இல்லையா? பொருளாதரத்தாலும், சமூக சூழலாலும் கல்வி அறிவு என்பது எட்டாக்கனியாக இருக்கின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு, முன்னேறிச் செல்ல கொடுக்கின்ற வாய்ப்பாகவே இதனைக் கருத வேண்டும். இவ்வாறு கொடுக்கின்ற வாய்ப்பு மதிப்பெண் அதிகம் பெற்று வருபவர்களுக்கு எதிராக அமையா வண்ணம் அரசு இணக்கமான முடிவை அறிவித்தும் கூட கண்மூடித்தனமாக இன்னும் தான் பிடித்த முயலுக்கு மூணுகால் என்னும் விதமாக நடந்து கொள்வது நன்றாக இல்லை. எந்தவொரு சூழலில் ஒருவன் வளர்க்கப்படுகிறான், கல்வி கற்கிறான் என்பது உளவியல் ரீதியாக நுண்ணறிவை தீர்மானிக்கிறது. பிறப்பில் ஒருவருக்கு கிடைக்கின்ற நுண்ணறிவு ஒரு அளவில் பங்கு வகித்தாலும் வாய்ப்புகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இக்கருத்தில் உளவியல் சிறிது அறிந்த எவரும் ஒப்புக் கொள்வர். எனவே ஒரு நாட்டின் சீரான முன்னேற்றத்திற்காக இது போன்ற இட ஒதுக்கீடு அவசியம் தான். இதற்கான கால வரையை காலம் தான் நிர்ணயம் செய்யும். இந்த வேளையில் பாவேந்தர் பாரதிதாசனின் இக்கவி தான் நெஞ்சில் பதிந்து நிற்கின்றது.
'என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞானத்தால்
பராக்கிரமத்தால் அன்பால்
உன்னத இமய மலைபோல்
ஓங்கிடும் மாட்சி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்த நாளோ!'

