Friday, July 27, 2007

தேரான் தெளிவும்...

ஏழு மாதங்களுக்கு முன்பாக எழுத வேண்டிய இப்பதிவுக்கு இப்போது தான் தருணம் வாய்த்தது. 'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு' அது போல நேரம் பார்த்து காத்திருந்தேன். தற்சமயம் ஆஸ்திரேலிய காவல்துறையின் நடவடிக்கையினைப் பார்க்கும் போது இப்போது எழுதுவது சரியாக இருக்கும் எனத் தோன்றியதால் எழுதுகிறேன். ஏற்கனவே பிறிதொரு பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 2007 ஆண்டினை சிட்னியில் வரவேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற எல்லா சுற்றுலாப் பயணிகளைப் போலவே எனக்கும் புத்தாண்டு வானவேடிக்கை பார்க்க ஆவல் இருந்தது. நண்பர்கள் பலர், விரைவாகவே காலை முதற்கொண்டே துண்டு விரித்து, ஓபரா ஹவுஸின் அருகில் தவங்கிடந்தனர். அவர்கள் சிட்னியில் பலகாலம் இருப்பவர்கள். நெளிவு சுளிவு தெரிந்தவர்கள். எனக்கு டிசம்பர் 31 ம் தேதி நண்பர் ஒருவர் விருந்திற்கு அழைக்கவே அங்கு சென்றுவிட்டு அந்தி சாயும் பொழுதில் தான் வானவேடிக்கை நடத்தப்படும் இடமான Cirucular Quay வர இயன்றது. அந்த நேரத்திற்கு எல்லாம் ஓபரா ஹவுஸினைச் சுற்றி பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கால் வைக்க முடியாத அளவுக்கு மக்கள் கூட்டமும் எங்கும் நிரம்பி வழிந்தது.

தடுப்புகளைத் தாண்டி செல்ல முடியாத வகையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உள்ளே செல்வது கடினம் என்ற முடிவானதைத் தொடர்ந்து தூரத்தில் இருப்பதாக உடன் வந்திருந்த நண்பர்களிடம் பேசி முடிவெடுத்தாகி விட்டது. நண்பர்களில் ஒருவர், 'இரண்டு வானவேடிக்கை நடத்தப்படும், ஒன்று ஒன்பது மணிவாக்கில் சிறுவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆனது. அது முடிந்த பின் பெரும்பாலும் பலர் வெளியேறிவிடுவர். பின் தடுப்புக்கு வெளியில் காத்திருப்பவர்களை காவல்துறை உள்ளே செல்ல அனுமதி அளிக்கும். அதன் பின்னர், வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் புத்தாண்டு பிறக்கும் போது பெரிய அளவில் நடத்தப்படும் பட்டாசு வானவேடிக்கைகளை அழகுற கண்டு களிக்கலாம்' என்றார். அந்த யோசனை சரியென்று படவே சுற்றி இருக்கும் இடங்களில் காலாற நடந்து விட்டு ஒன்பது மணிக்கான வானவேடிக்கை ஆரம்பிக்கும் முன்னர் தடுப்புகள் அருகில் வரிசை கட்டி நின்றாயிற்று. ஒன்பது மணிக்கான வானவேடிக்கை முடிந்தவுடன் நண்பர் சொன்னதைப் போலவே, ஓபரா ஹவஸின் அருகில் இருந்த மக்கள் கூட்டம் சிறிது களையத் துவங்கியது.

மக்கள் வெளியேறி முடித்தவுடன் காவல் துறை, தடுப்புக்கு வெளியில் காத்திருக்கும் மக்களை ஓபரா ஹவுஸின் அருகில் செல்ல ஆயத்தமாகியது. தடுப்புக்கு அப்பால் மிக அருகிலேயே உள்ளே செல்லும் மக்களை சோதனை செய்ய வசதி செய்து வைத்து இருந்தனர். சோதனை என்பது ஒன்றும் அல்ல, மதுபானங்கள் அல்லது அச்சுறுத்தும் வகையில் ஆயுதமோ இருக்கிறதா என்று சரிபார்ப்பது மட்டுமே. பெண்களுக்கு சோதனை முறை அந்தளவு கெடுபிடி கிடையாது. காவல்துறையினர் உள்ளே அனுப்புவதற்கு அனுமதி அளித்து மக்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தது. உள்ளே செல்ல குறிப்பிட்ட அளவில் தான் அனுப்புவார்கள் என்ற நிலைப்பாடு இருந்ததால் பின்னால் இருப்பவர்களின் ஆர்வம் அதிகமாகவே மக்கள் கூட்டத்தினை முன்னோக்கி தள்ளினார்கள். இதில் இடைப்பட்ட நிலையில் உள்ள மக்கள் பாடு படு திண்டாட்டமாகி திக்கி முக்காட வேண்டிய நிலை. இந்நிலையில் அங்கிருந்த பெண் போலீசு பிரயோகித்த வார்த்தை மிகவும் கடினமான வார்த்தையாக இருந்தது. You third world country people....ஏய் மூன்றந்தர உலக மக்களே உங்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை என ஆரம்பித்து வசைச் சொற்கள் பலமாக இருந்தது. இத்துடன் தடுப்புகளை அமைத்து தடுத்துவிட்டனர். தடுப்புக்கு மிக அருகில் நான் நிற்கின்ற சூழ்நிலை, அத்தனை வசைச் சொற்களும் என்னை நோக்கியே வந்த வண்ணமாய் இருந்தன. பதிலுக்கு நான், அதற்கு காரணமானவன் நான் அல்லன், என்றதோடு நிறுத்திக் கொண்டேன்.

அச்சூழ்நிலையில் ஏன் சிட்னி என்ற கேவலமான காவல்துறை உள்ள இடத்திற்கு வந்தோம் என்றாகியது. கூட்டம் மிகுதி என்றால் அதற்கு பொறுப்பானவர்கள் அவர்கள் சொல்வது போலவே மூன்றாந்தர உலக மக்கள் மட்டும் அல்ல, அங்கிருந்த அனைத்து நாட்டவரும் ஆஸ்திரேலியரும் தான். கூட்டத்தை நெறிப்படுத்த பல வழிமுறைகள் இருக்க ஒட்டு மொத்தமாய் மூன்றாந்தர நாட்டு மக்கள் என்ற வார்த்தையை பிரயோகிக்க அந்தப் பெண்மணிக்கு எந்த அருகதையும் இல்லை. தான் வானத்திலிருந்து குதித்து ஆள்வதற்காகவே வந்தவர்கள் போல் நடந்து கொள்ளும் விதமும், அந் நாட்டிற்குள் ஆசியர்கள் வருவதற்கு வைத்துள்ள விதிமுறைகளும் தன்மானம் பற்றி யோசிப்பவர்களால் மிகவும் யோசித்தே முடிவெடுப்பர். மிகவும் கசப்பாக அமைந்துவிட்ட அனுபவமாகவே இருந்தது புத்தாண்டு நிகழ்வு. அக்காவல்துறை பெண்மணி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எனது எண்ணத்தை வெளியிட்ட போது, நண்பர்கள் 'இந்த விசயத்தை வைத்து உனது நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்க வேண்டாம்' என்று கூறவே ஆற்றாமையிலேயே இடம் பெயர்ந்தேன். அப்போது சில மனிதர்களை வைத்து நாம் முடிவெடுப்பது ஒட்டு மொத்ததமாய் பார்க்கும் போது விபரீதமான முடிவைத் தரும் என எண்ணினேன்.

இந்நிகழ்வு மாதங்கள் பல ஆகியும் இதயத்தில் குத்திய முள்ளாகவே இருக்கிறது. தற்போது அதே ஆஸ்திரேலிய காவல்துறை நாங்கள் கொடூரமானவர்கள், போக்கிரிகள், எப்படியும் எங்களிடம் மாட்டியவர்களை குற்றவாளிகளாக ஆக்கிக் காட்டுவோம் என்று கங்கணம் கட்டி தனது முகத்தில் சேற்றை வாரி கொண்டிருக்கிறார்கள் சமீபத்திய மருத்துவர் விசயத்தில்..எனது தாத்தா அடிக்கடி சொல்லும் வாக்கியமும் எனக்கு நினைவுக்கு வருகிறது. 'எவனொருவன் ஒரு காரியத்தை ஆராய்ந்து பாராமால் ஓதிடினும் (பேசிடினும்), செய்திடினும் ஊறு (துன்பம்) மிக உண்டாமே'

இவர்களுக்காவே வான் புகழ் வள்ளுவன் எழுதி வைத்தான் போலும் இப்படி!

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்


Thursday, July 19, 2007

ஜெர்மனியில் காற்றுடன் கன மழை

இன்று பிற்பகல் ஜெர்மனியில், பைராய்த்தில் காற்றுடன் கூடிய கனமழை அரைமணி நேரம் நீடித்தது. மரங்கள் முறிந்து சாலையில் குறுக்கே கிடக்கின்றன. வாகன நிறுத்துமிடத்தில் உள்ள மரங்கள் வாகனங்களில் சாய்ந்தும் பெருத்த சேதம் விளைந்துள்ளன. துவக்கத்தில் இடியுடன் துவங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்து கொண்டிருந்தது. திடீரென சப்தம் அதிகமாக கேட்கவே கண்ணாடி கதவின் வழியே பார்க்கும் போது கிரிக்கெட் பந்தில் ஐந்தில் ஒரு பங்கு உள்ள அளவு பனிக் கற்கள் விழுந்தன. நகரில் பூக்கடையின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டும், பனிக் கற்களாலும் சேதமடைந்தன. சாலைகளின் குறுக்கே ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். நகர நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து ஒடிந்து விழுந்த மரஙகளை அப்புறப்படுத்தி வருகிறது. இத்துடன் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. செல்பேசியில் இருந்து எடுத்த புகைப்படங்கள் என்பதால் சற்று தரம் குறைவாகவே உள்ளது. இதில் விழுந்த பனிக்கற்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சாலை ஓரத்தில் ஒதுங்கி இருப்பதையும் காணலாம். ஜெர்மனியில் இது போன்ற மழை வழக்கத்துக்கு மாறாக இருப்பதால் மழை பெய்யும் போது ஏற்பட்ட சப்தத்தில் ஜெர்மனியரின் முகத்தில் ஈயாடவில்லை.

Saturday, July 07, 2007

இணைய தள அறிமுகம் [கழுகுமலை.com]

கழுகுமலை குறித்தான மூன்று பதிவுகளை ஏற்கனவே இங்கு எழுதியிருக்கின்றேன். நண்பர்களின் அரும் முயற்சியாலும் எனது சிறிய பங்களிப்பாலும் இப்போது இணையத்தில் கழுகுமலைக்கு என ஒரு வலைப்பக்கம் தயாராகியுள்ளது. இதில் கழுகுமலையின் பெரும்பாலான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் கணினி வல்லுநர் குழு பல மாற்றங்கள் செய்ய உள்ளது. இருப்பினும் உங்கள் பார்வைக்கு வலைப்பக்கத்தினை அறிமுகம் செய்கின்றேன். உங்களது மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. தற்சமயம் முகப்புப் பக்கம் ஆங்கிலத்திலும் ஏனைய அனைத்து விபரங்களும் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய இடைவெளியில் அனைத்துப் பக்கங்களும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட உள்ளன.

தள முகவரி:
www.kalgumalai.com அல்லது
www.kazhugumalai.co.in

பிற விபரங்கள்:
முந்தைய பதிவுகள்

கழுகுமலைக்கு வாரீங்களா? - 1
கழுகுமலைக்கு வாரீங்களா? - 2
கழுகுமலைக்கு வாரீங்களா? - 3

விக்கிப்பீடியாவில் கழுகுமலை:
ta.wikipedia.org/wiki/கழுகுமலை

விக்கிமேபியாவில் கழுகுமலை:
wikimapia.org/539217/